மகளிர் மருத்துவத்தில் சமீபகாலமாக பல குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை ஆகும். இந்த குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சை தொழில்நுட்பமானது, மகளிருக்கு ஏற்படும் ஏராளமான நோய் நிலைமைகளைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சையளிக்கும் விதத்தில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை முறையில், சில சிறப்பு கருவிகள் மற்றும் ஒரு சிறிய கேமரா (லேப்ரோஸ்கோப்) பயன்படுத்தப்படுகின்றன. இந்த லேப்ரோஸ்கோப் நமது உடலின் உள்உறுப்புகளின் படங்களை ஒரு திரையில் தெளிவாகக் காண்பிக்கிறது, அதைக் கொண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிக்கலான நடைமுறைகளை மிகத் துல்லியமாக மேற்கொள்கின்றனர்.
மகளிர் மருத்துவத்தில் லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையின் பயன்பாடுகள்
மகளிர் மருத்துவ நிலைமைகளுக்கு சிறப்பான, உயர்தர தீர்வுகளை வழங்குவதில் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . இதன் பயன்பாட்டுக்கான சில உதாரணங்கள் இதோ:
1. கருப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கான சிகிச்சை
“ஃபைப்ராய்டுகள்” என்பது கருப்பையில் ஏற்படும் பொதுவான புற்றுநோய்-அல்லாத வளர்ச்சியாகும்; அதிக இரத்தப்போக்கு, இடுப்பு வலி மற்றும் கருவுறுதல் பிரச்சினைகளை இது ஏற்படுத்தக்கூடும். “லேப்ரோஸ்கோப்பிக் மயோமெக்டோமி” (ஃபைப்ராய்டு அகற்றுதல்) என்ற செயல்முறை, குறைந்த நேரத்தில் ஃபைப்ராய்டுகளை திறம்பட அகற்றி, கருப்பையைப் பாதுகாத்து வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும்.
2. எண்டோமெட்ரியோசிஸ் மேலாண்மை
“எண்டோமெட்ரியோசிஸ்” என்பது ஒரு வலிமிகுந்த நோய் நிலை. இதில் பொதுவாக கருப்பையை ஒட்டியிருக்கும் திசு, அதற்கு வெளியே வளரும். வெளியே வளரும் இந்த திசுக்களை லேப்ரோஸ்கோப்பிக் முறையில் அகற்றுவது இப்போது நோயறிதல் மற்றும் சிகிச்சையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் வலியைக் குறைத்து, அவர்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.
தொடர்புடைய வலைப்பதிவு: மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்திற்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது
3. கருப்பை நீர்க்கட்டிகளை அகற்றுதல்
கருப்பை நீர்க்கட்டிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உடல் அசௌகரியம், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் அல்லது கருப்பை முறுக்கு போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும். லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையானது, கருப்பையின் செயல்பாட்டைப் பாதுகாக்கும் அதே வேளையில் நீர்க்கட்டிகளையும் பாதுகாப்பாக அகற்றுகிறது.
4. கருப்பை நீக்கம் (கருப்பையை அகற்றுதல்)
லேப்ரோஸ்கோப்பிக் கருப்பை நீக்கம் என்பது குறைந்தபட்ச ஊடுருவும் தொழில்நுட்பங்கள் மூலம் கருப்பையை அகற்றும் செயல்முறை ஆகும். பாரம்பரிய திறந்த-நிலை அறுவை சிகிச்சைகளுடன் ஒப்பிடும் போது, இந்த முறையில் நோயாளியினால் சகஜ உடல்நிலைக்கு விரைவாக மீண்டு வர முடியும், அத்துடன் இதன் விளைவாக ஏற்படும் சிக்கல்களும் குறைவுதான்.
5. கருவுறாமைக்கான சிகிச்சை
“அடிசியோலிசிஸ்” (இடுப்பு ஒட்டுதல்களை அகற்றுதல்) அல்லது “பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்” (PCOS) மேலாண்மை போன்ற பெண் அறுவை சிகிச்சை முறைகள், கருத்தரிக்க சிரமப்படும் பெண்களுக்கு கணிசமாக உதவும்.
மகளிர் மருத்துவத்தில் லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையின் நன்மைகள்
பாரம்பரிய, திறந்த-நிலை அறுவை சிகிச்சைகளுடன் தொடர்புடைய வலி, வடுக்கள் மற்றும் நீண்ட மீட்புக்காலங்கள் இனி இல்லை. லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை முறை சிறந்த பலன்களை வழங்குகிறது, உடலாரோக்கியத்தை விரைவாக மீட்கிறது, அத்துடன் இந்த முறையில் அசௌகரியமும் குறைவு. அதனால், இது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகிய இருவருமே விரும்பும் மருத்துவச் சிகிச்சைமுறையாக இருக்கிறது.
1. பலதரப்பட்ட நோய்களுக்கான தீர்வு
லேப்ராஸ்கோபி என்பது பல்வேறு பொதுவான மகளிர் நோய் நிலைமைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான ஒரு தனிப்பயனாக்கக்கூடிய செயல்முறையாகும். இடுப்பு வலி அல்லது மலட்டுத்தன்மை போன்ற சில அறிகுறிகளுக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் லேப்ரோஸ்கோப்பியை பரிந்துரைக்கலாம். உங்களுக்கு என்ன நோய் என்பது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தால், உங்கள் நோய் நிலைக்கு சிகிச்சையளிப்பதற்கு லேப்ரோஸ்கோப்பி ஒரு வழியாக அமையலாம்.
பொதுவாக பின்வரும் சில மகளிர் மருத்துவ நிலைமைகளுக்கு லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன: எண்டோமெட்ரியோசிஸ், ஃபைப்ராய்டுகள், கருப்பை நீர்க்கட்டிகள், கருப்பை நீக்கம் மற்றும் குழாய் இணைப்பு (ட்யூபல் லிகேஷன்).
2. சிறிய கீறல்கள்
பாரம்பரிய திறந்த-நிலை அறுவை சிகிச்சைகளுக்கு தேவைப்படும் பெரிய கீறல்களைப் போல அல்லாமல், உடலில் போடப்படும் சிறிய அளவிலான கீறல்கள் வழியாகவே லேப்ரோஸ்கோப்பிக் செயல்முறை செய்யப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், லேப்ரோஸ்கோப்பிக் கீறல்கள் ஒரு பொத்தான் துளையின் அளவில் தான் இருக்கும், அதனால் அதற்குத் தேவைப்படும் தையல்கள் (ஸூச்சர்கள்) மற்றும் அதன் விளைவாக ஏற்படக்கூடிய வடுக்களும் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருக்கும்.
தொடர்புடைய வலைப்பதிவு: Laparoscopic Surgery – What You Need to Know
3. சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து குறைவு
லேப்ரோஸ்கோப்பிக் செயல்முறையில் கேமராவைப் பயன்படுத்தி, சிக்கலான நடைமுறைகளை கூட மருத்துவர்களால் துல்லியமாகச் செய்ய முடியும். பொதுவாக இந்தச் செயல்முறையில், சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி அல்லது பாதிப்பு குறைவாகவே உள்ளது. இதனால் அறுவை சிகிச்சையின் போதும், அதற்குப் பின்னரும் ஏற்படும் சிக்கல்களின் அபாயம் குறைகிறது.
அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் இரத்த இழப்பு, தொற்றுக்கான ஆபத்து மற்றும் வீக்கத்திற்கான ஆபத்து ஆகியவை, பாரம்பரிய திறந்த-நிலை அறுவை சிகிச்சையை விட குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்க நன்மை ஆகும்.
4. குறைவான வலி
பொதுவாக அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் வேளையில் நோயாளிகளுக்கு வலி, வீக்கம் மற்றும் சிராய்ப்பு ஏற்படுவது இயல்பானது, ஆனால் குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சை பாரம்பரிய அறுவை சிகிச்சைகளைப் போல சுற்றியுள்ள திசுக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால் அறுவை சிகிச்சைக்குப் பின்பு நோயாளிகளுக்கு ஏற்படும் வலி கணிசமாகக் குறைகிறது என்பதுடன், அவர்களால் விரைவில் குணமடைந்து நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற முடிகிறது.
5. விரைவான குணம்
லேப்ரோஸ்கோப்பி என்பது குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை என்பதால் பெரும்பாலான நடைமுறைகள் வெளிநோயாளர் அடிப்படையில் செய்யப்படுகின்றன, அதாவது நோயாளி மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டியதில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி சிறிது நேரம் கண்காணிக்கப்படுவார், அதன் பின்னர் அவர் வீட்டிற்குச் செல்லலாம்.
6. லேப்ரோஸ்கோப்பியில் முன்னேற்றங்கள்
மகளிர் நோய்நிலைகளுக்கு சில சமயம் ரோபோடிக் லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது . ரோபோடிக் கைகள் மனித கைகளை விட உறுதியானவை என்பதால், அவை நுட்பமாக செயல்பட்டு சிறந்த பலன்களை வழங்குகின்றன.
மைக்ரோலேப்ரோஸ்கோப்பி என்பது ஒரு இன்னொரு புதிய அணுகுமுறை. இதில் அறுவை சிகிச்சை செய்ய இன்னும் சிறிய ஸ்கோப்கள் (கேமரா) பயன்படுத்தப்படுகின்றன, அத்துடன் இந்த செயல்முறை பகுதி-மயக்க மருந்து கொடுத்து செய்யப்படலாம், அதனால் நீங்கள் செயல்முறையின் போது முழுமையாக மயக்கமடையாமல் இருப்பீர்கள், மீட்புக்காலமும் கணிசமாகக் குறையும்.