நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன்-செறிந்த இரத்தத்தை செலுத்தி, நம்மை உயிருடன் வைத்திருக்க நம் இதயம் அயராது உழைக்கிறது. ஆனால் அதன் செயல்திறன் குறையத் தொடங்கினால் என்ன ஆகும்? இதய நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டு, அவை தோன்றியவுடன் முடிந்தவரை விரைவாக மருத்துவரை அணுகுவது முக்கியம். இதயப் பிரச்சினையின் ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தானது, ஏனென்றால் இது மாரடைப்பு உள்ளிட்ட கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், மரணத்துக்கு வழிவகுக்கலாம்.
இதய நோய் ஏற்படும் அபாயம் யாருக்கு அதிகம்?
பின்வரும் ஆபத்துக்காரணிகள் இருப்பவர்களுக்கு இதய நோய்க்கான அபாயம் அதிகம், அதனால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்:
- வயது: 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 55 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்.
- குடும்ப வரலாறு: உங்கள் குடும்பத்தில் முன்னோர்களுக்கு இதய நோய் இருந்திருக்கும் பட்சத்தில் உங்களுக்கு அதற்கான ஆபத்து அதிகம்.
- உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு: இவை அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்துவதில்லை ஆனால் தமனிகளை சேதப்படுத்தி, அடைப்புகளை ஏற்படுத்துகின்றன.
- புகைபிடித்தல்: சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டின் இரத்த நாளங்களை சுருக்கி, இரத்த அழுத்தத்தையும் மாரடைப்புக்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது.
- நீரிழிவு நோய்: உயர் இரத்த சர்க்கரை அளவுகள் இரத்த நாளங்களை சேதப்படுத்துகின்றன, அதனால் இதய பிரச்சினைகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
- உடல் பருமன்: உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அது இதயத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
- குறைவான உடல்–சார் செயல்பாடுகள் கொண்ட வாழ்க்கைமுறை: உடல்-சார் செயல்பாடுகள் அதிகம் இல்லையென்றாலோ அல்லது முறையாக உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலோ அது இதய தசையை பலவீனப்படுத்துகிறது.
- மன அழுத்தம்: நாட்பட்ட மன அழுத்தமானது அழற்சி மற்றும் உயர் இரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கிறது.
மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவ நிலைகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ச்சியாக மந்தமாக உணர்ந்தாலோ, மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ அல்லது லேசான இதய வலிக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ, உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
தொடர்புடைய வலைப்பதிவு: இதய நோயாளிகளுக்கான உணவுமுறைத்திட்டம்
நீங்கள் புறக்கணிக்கக்கூடாத சில இதயநோய் அறிகுறிகள் இதோ!
நீங்கள் விழிப்புடன் இருந்து இந்த அறிகுறிகளை கவனித்து, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், இல்லையென்றால் அவை மாரடைப்பு போன்ற பெரிய ஆபத்துக்களுக்கு அல்லது மரணத்துக்கு வழிவகுக்கும்.
மார்பு அசௌகரியம் அல்லது வலி
இதயப் பிரச்சினைகளின் மிகப்பெரிய அறிகுறிகளில் ஒன்று மார்பு வலி அல்லது அசௌகரியம் ஆகும். இந்த வலி எப்போதும் கூர்மையான வலியாகத்தான் இருக்கும் என்பதில்லை, சில சமயம் இது அழுத்தம் அல்லது எரிச்சல் போன்ற உணர்வாக தோன்றலாம். இந்த அசௌகரியமான நிலை சில நிமிடங்களுக்கு மேல் நீடித்தாலோ அல்லது விட்டுவிட்டு ஏற்பட்டாலோ, உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள் – இது மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
மூச்சுத் திணறல்
சாதாரணமாகவே நீங்கள் சுவாசிக்க சிரமப்படுகிறீர்களா? இது இதயப் பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். உங்கள் இதயம் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்யாதபோது, நுரையீரலில் திரவம் தேங்கி, சுவாசிப்பதை கடினமாக்குகிறது. குறிப்பாக, படுத்த நிலையில் உங்களுக்கு விவரிக்க முடியாத மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
காரணமில்லாமல் சோர்வு ஏற்படுதல்
நீங்கள் பெரிதாக உடல்-சார் செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை என்றாலும்கூட, அதன் பிறகு சோர்வாக உணர்ந்தால் அது இதயப் பிரச்சனையின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். போதுமான தூக்கம் இருந்தும் மற்றும் நன்றாக சாப்பிட்ட பிறகும் கூட நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால், ஆக்ஸிஜன்-செறிந்த இரத்தத்தை உங்கள் இதயத்தால் திறம்பட பம்ப் செய்ய முடியவில்லை என்று அர்த்தம்.
கை, முதுகு, கழுத்து அல்லது தாடையில் வலி
இந்தப் பகுதிகளில் – குறிப்பாக இடது கையில் – ஏற்பட்டு பரவும் வலி, பெரும்பாலும் மாரடைப்பின் அறிகுறியாகும். குறிப்பாக பெண்களுக்கு, வழக்கமான ஏற்படும் மார்பு வலிக்கு பதிலாக தாடை அல்லது முதுகுவலி ஏற்படுகிறது. உடலின் இந்த பகுதிகளில் விவரிக்க முடியாத வலி உங்களுக்கு ஏற்பட்டால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி
அடிக்கடி தலைச்சுற்றல் அல்லது மயக்கம் வருவது போல் உணருவது உங்கள் இதயம் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்யவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
சீரற்ற இதயத்துடிப்பு அல்லது படபடப்பு
இதயத்துடிப்பு அல்லது படபடப்பு எப்போதாவது ஏற்பட்டால் பரவாயில்லை, ஆனால் அவை தொடர்ச்சியாக ஏற்பட்டால் அவை இதயப் பிரச்சினைகளின் அறிகுறிகளாக இருக்கலாம். உங்கள் இதயத்துடிப்பு மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ இருந்தால், அதற்குக் காரணம் “ஏரித்மியா”வாக இருக்கலாம், அதனால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.
கால்கள், கணுக்கால் அல்லது பாதங்களில் வீக்கம்
உங்கள் இதயம் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய போராடும் போது, இது திரவக் குவிப்புக்கு (உடல் பாகங்களில் வீக்கம் அல்லது “இடிமா”) வழிவகுக்கலாம். உங்களுக்கு தொடர்ந்து வீக்கம் இருக்கும் பட்சத்தில், குறிப்பாக மற்ற இதய அசௌகரிய அறிகுறிகளும் இருக்கும் பட்சத்தில், உடனடியாக மருத்துவ கவனிப்பை நாடவும்.
குளிர் வியர்வை அல்லது குமட்டல்
குளிர் வியர்வை, குமட்டல் அல்லது வாந்தி, இவற்றுடன் மற்ற இதய அசௌகரிய அறிகுறிகளும் இருக்கும் பட்சத்தில் – இவை வரவிருக்கும் மாரடைப்பைக் குறிக்கலாம். இந்த அறிகுறிகள் பெண்களில் அதிகம் காணப்படுகின்றன.
தொடர்புடைய வலைப்பதிவு: இதய நோய்ச் சிகிச்சையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
இதயநோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி
இதய நோயைத் தடுக்க வேண்டுமென்றால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டியது முக்கியம்.
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவை உண்ணுங்கள்:
உணவுகள் மற்றும் சர்க்கரைகளைக் குறைத்து, முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை தேர்ந்தெடுங்கள்.
முறையாக உடற்பயிற்சி செய்யுங்கள்: வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிடங்களுக்கு மிதமான உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
மன அழுத்தத்தை குறைக்கவும்: தியானம், ஆழ்ந்த சுவாசம் அல்லது மகிழ்ச்சியான பொழுதுபோக்குகளில் ஈடுபட முயற்சிக்கவும்.
புகைபிடிப்பதை நிறுத்துங்கள்: புகையிலை தமனிகளை சேதப்படுத்துகிறது, அத்துடன் இதய நோய்க்கான அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு நிலைகளை கண்காணிக்கவும்: உங்கள் இதய ஆரோக்கியத்தைக் கண்காணிக்கத் தேவையான உடற்பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ளுங்கள்.
நீரேற்றமாக இருங்கள்: போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள், ஏனென்றால் உடலின் நீர்ச்சத்து இரத்தசுழற்சியை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும்.
நல்ல தூக்கம் தேவை: போதுமான தூக்கம் பெறாமல் இருப்பது இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
இறுதியாக சில வார்த்தைகள்…
உங்கள் இதயம் தான் உங்கள் உடலை நல்ல முறையில் இயங்க வைக்கும் இஞ்சின், அதனால் அது எப்போது பழுதடைகிறது என்பதை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் முக்கியம். இதயக் கோளாறுகள் மற்றும் அவற்றின் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருப்பது உங்கள் உயிரைக் காக்கும். அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். முறையாக உடற்பரிசோனை செய்து கொள்ளுதல், நல்ல வாழ்க்கைமுறையை பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நாம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நோய் வந்த பிறகு செய்து கொள்ளும் மருத்துவ சிகிச்சையை விட அது வருமுன் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைள் என்றென்றும் சிறப்பானவை….
வருமுன் காப்பதே என்றும் சிறந்தது!